திருப்பத்தூர் நாட்றம்பள்ளியில், கணவரின் அனுமதியுடன் தோழியுடன் மேல்மலையனூர் கோவிலுக்குச் சென்ற இஸ்லாமியப் பெண் ஷாகிராவை அவரது உறவினர்களே தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஷாகிராவின் தோழி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பகுதியில் தோழியுடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்ற இஸ்லாமிய இளம்பெண் மற்றும் அவரது தோழியை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஃபாருக். இவருடைய மனைவி ஷாகிரா. இவர் கணவரின் அனுமதியை பெற்று பெண் தோழியான வேண்டா மணியுடன் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இந்த தகவல் அறிந்த ஷாகிராவின் உறவினரான தாய் சூர்யா, அண்ணன் அமீர் பாஷா, அமீரின் மனைவியான சபுரா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஷாகிராவின் தோழியான வேண்டாமணியை வயிற்றில் எட்டி உதைத்தது மட்டுமல்லாமல் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த வேண்டாமணி நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஷாகிராவையும் தாக்கி விட்டு அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகையை உறவினர்கள் பறித்த போது காது கிழிந்தது. இதுகுறித்து ஷாகிரா மற்றும் அவரது கணவரும் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


