என்ன சுத்து போட்டுட்டாங்க சார்.! என்னோட லைப் முடிஞ்சது.. போலீசிடம் கதறிய செய்தியாளர்! வைரலாகும் பகீர் ஆடியோ.!
கடந்த இரண்டு நாட்களாக மர்ம நபர்கள் இவரது வீட்டையும் நேசப் பிரபுவின் நடமாட்டத்தையும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.
பல்லடம் அருகே காவல்துறையினரின் மெத்தனப்போக்கால் நியூஸ் 7 செய்தியாளர் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக போலீசாரிடம் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள காமநாயக்கன்பாளையம் கே.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நேசப் பிரபு. கடந்த 7 ஆண்டுகளாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மர்ம நபர்கள் இவரது வீட்டையும் நேசப் பிரபுவின் நடமாட்டத்தையும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தன்னை யாரோ சிலர் பின் தொடர்வதாகவும், தனது தந்தையிடம் முகவரி உள்ளிட்டவை அந்த நபர்கள் கேட்டறிந்ததாகவும் காவல்துறைக்கு நேசப்பிரபு தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க;- பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை!
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். இரவில் வீட்டில் இருந்தபோது சில அடையாளம் தெரியாத நபர்கள் அவரை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வெளியே வந்த நேரம் பார்த்து கத்தி, அரிவாளால் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது. மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே நேசப் பிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மர்ம நபர்களால் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் நிகழும் முன் கூட காவல்துறையினரிடம் செய்தியாளர் பாதுகாப்பு கோரும் செல்போன் பேச்சும் வெளியாகியுள்ளது. அதில் அவர் “வந்துட்டே இருக்கானுங்க சார்... எவ்ளோ தடவைதான் பாக்கறது? பல்லடம் போலீஸ்கிட்டே சொல்லி பிடிக்க சொல்லுங்க சார். எல்லா கேமராலயும் அவங்க முகம் பதிஞ்சிருக்கும். இந்த பெட்ரோல் பங்க் கேமரால கூட இருக்கும். எதுவேணா நடக்கலாம் சார்...” என்று கூறுகிறார்.
காவலர் பேசிக்கொண்டிருந்த சில விநாடிகளில், செய்தியாளர் நேசப்பிரபு, “சார் வந்துட்டானுங்க சார்... 5 கார் வந்திருக்கு சார்... அச்சோ சார்... என் லைஃப் முடிஞ்சுச்சு... அவ்ளோதான்” என அலறும் நேரத்தில் செல்போன் துண்டிக்கிறது. இந்த ஆடியோ பதிவை கேட்போரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட எஸ்.பி. சாமிநாதன் 4 தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே பத்திரிகையாளர்கள் சங்கங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போலீசாரின் மெத்தனப்போக்கிற்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். மெத்தனமாக செயல்பட்ட போலீஸ் மீதும் அரசு தரப்பில் உரிய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் கூறிவருகின்றனர்.