murderer surrendered in erode police station
சித்தோடு அருகே சொத்து தகராறில் தந்தை பாட்டியை கொலை செய்துவிட்டு தப்பி சென்ற கொலையாளி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
ஈரோடு அருகே வசுவப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (55). ஈரோடு மேட்டூர் ரோட்டில் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் சந்தோஷ்குமார்(23). ஈரோட்டில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவர்களுடன் பழனிச்சாமியின் தாய் பாவாயி(75) வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக பழனிச்சாமிக்கும், அவரது மகன் சந்தோஷுக்கும் இடையே சொத்து பிரித்து கொடுப்பது தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை தனது தாயார் பாவாயியுடன் பழனிச்சாமி பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சந்தோஷ், மீண்டும் சொத்து தொடர்பாக பேசியுள்ளார். இதனால், பழனிசாமிக்கும், சந்தோஷிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து பழனிசாமியை சுட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாட்டி பாவாயி, அலறியடித்து கொண்டு ஓடிவந்தார். அவரையும், சந்தோஷ் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றார். இதில், 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சந்தோஷை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், தப்பி சென்ற சந்தோஷ் குமார் சித்தோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
