சென்னையில் ஒரே நாளில் இரண்டுகொலைகள் நடந்துள்ளது. கொத்தவால் சாவடியில் வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சில மணி நேரங்களில் திருவல்லிக்கேணியில் வாலிபர் ஒருவர் வெட்டிகொலை செய்யப்பட்டார்.
சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தை சேர்ந்தவர் தயாநிதி(28) . ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அடிக்கடி ஏரியாவில் அடிதடியிலும் ஈடுபடுவாராம். இதனால் சிலரிடம் முன்பகை இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையம் அருகே தயாநிதி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை சராமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் தப்பிக்க முயன்ற தயாநிதி ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார்.
அவரை வெட்டிய கும்பல் தப்பி ஓடி விட்டது. இதை பார்த்த அருகிலிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து ராயபேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தயாநிதிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் நள்ளிரவில் பலியானார்.

தயாநிதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தயாநிதி ஸ்ரீகாந்த் என்ற நபரை வெட்டியதாகவும் அதனால் ஏற்பட்ட முன்பகையால் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
