சென்னை கொத்தவால் சாவடியில் குடி போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தலையில் கல்லை போட்டு கொன்ற போதை ஆசாமியை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை ஏழுகிணறு , கொத்தவால் சாவடி நாட்டுபிள்ளையார் கோவில் தெருவில் வசித்தவர் மூர்த்தி(32). இவர் கொத்தவால் சாவடியில் லோடு மேனாக பணியாற்றி வந்தார். பிளாட்பாரத்தில் வசித்து வந்தார். இதே பிளாட்பாரத்தில் வசித்தவர் ராபர்ட் (50) .
இவர் ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். ராபர்ட்டும் , மூர்த்தியும் நண்பர்கள் . இருவருக்கும் குடிப்பழக்கம் உண்டு. குடித்துவிட்டு போதையில் அடிக்கடி சண்டையும் போட்டு கொள்வார்கள். நேற்று இரவு 7-30 மணி அளவில் வழக்கம் போல் குடி போதையில் வந்த ராபர்ட் மூர்த்தியிடம் தகராறு செய்துள்ளார்.
தனக்கு குடிக்க பணம் இல்லை பணம் கொடு என்று மூர்த்தியிடம் சண்டை போட்டுள்ளார். இந்த வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதில் தாக்கப்பட்டு மூர்த்தி கீழே விழ ராபர்ட் அருகிலிருந்த பெரிய கல்லை எடுத்து மூர்த்தி தலையில் போட்டுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் மூர்த்தி பலியானார். இதை பார்த்ததும் ராபர்ட் அங்கிருந்து தப்பி ஓடினார். பொதுமக்கள் அவரை விரட்டி பிடித்தனர். பின்னர் கொத்தவால் சாவடி போலீசில் ஒப்படைத்தனர். மூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பபட்டது.
குடி போதையில் நண்பர்களுக்குள் தாக்கப்பட்டு மரணமடைவது சமீப காலமாக சென்னையில் அதிகமடைந்து வருகிறது. கோயம்பேட்டில் டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஓட்டுனர் ஒருவர் டைல்ஸ் கடையில் இரவில் கொலைசெய்யப்பட்டு கிடந்தார் , மதுரவாயல் அச்சக அதிபர் ஒருவர் இரவில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மது போதை அனைத்தையும் மறக்க செய்து விடுகிறது. இதனால் குற்றங்களின் எண்ணிக்கைத்தான் அதிகரிக்கிறது.
