Murder case against KD Rajendra balaji is dismissed - Madurai High Court

மதுரை

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான கொலை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்றம்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், "என் சகோதரர் மீனாட்சிசுந்தரம் ராஜபாளையம் நகராட்சி 17–வது வார்டு அதிமுக கவுன்சிலராகவும், இராஜபாளையம் நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலராகவும் இருந்தார். இவர் அரசியல் முன்விரோதம் காரணமாக 13.5.2014–ல் கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கை இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் தினகரன் விசாரித்தார். மீனாட்சிசுந்தரம் கொலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.எல்.ஏ. கோபால்சாமி உள்பட பலருக்கு தொடர்பு இருப்பதால் அவர்களை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

இந்த வழக்கின் விசாரணையில் தொடக்கம் முதலே எதிரிகளுக்கு சாதகமாக காவல் ஆய்வாளர் செயல்பட்டு வந்தார். இதனால் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். 

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கொலை வழக்கின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தடை விதித்தது. இந்த தடையை மீறி ஐந்து பேரை மட்டும் எதிரியாக காண்பித்து இராஜபாளையம் நீதிமன்றத்தில் ஆய்வாளர் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார். 

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற எட்டு பேரை தண்டனையில் இருந்து காப்பாற்றும் நோக்கத்தில் அவர் செயல்பட்டுள்ளார். இதனால் கொலை வழக்கை வேறு அதிகாரி விசாரணைக்கு மாற்றக் கோரியும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டவர்களை வழக்கில் சேர்க்கவும் கோரி ராஜபாளையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

எனவே, கீழ்கோர்ட்டு உத்தரவை ரத்து செய்து எனது கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார். இறுதியில் நிலுவையில் உள்ள கொலை வழக்கை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.