சேலம்

வரி செலுத்தாத வணிக நிறுவனங்களின் முன்பு குப்பை தொட்டியை வைத்து நகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்கிறது. இதனால் ஆடிப்போன வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் உடனே வரியை கட்டுகின்றனர். 

மேட்டூர் நகராட்சியில் வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் முன்பு குப்பை தொட்டியை வைத்து நூதன முறையில் மேட்டூர் நகராட்சி நிர்வாகம் வரி வசூலில் ஈடுபட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் சதுரங்காடியில் உள்ள ஒரு வணிக நிறுவனம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் நீண்ட நாட்களாக பாக்கி வைத்திருந்தது. 

இந்த வரியை வசூல் செய்வதற்காக மேட்டூர் நகராட்சி நிர்வாகம் நூதன முறை ஒன்றை கையாண்டுள்ளது. அதாவது அந்த வணிக நிறுவனத்தின் நடுவாசல் முன்பு நேற்று காலை இரண்டு குப்பைத் தொட்டிகளை நகராட்சி வண்டியின் மூலம் எடுத்துச் சென்று வைக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த வணிக நிறுவனத்தின் உரிமையாளர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரித் தொகையை உடனே செலுத்தினார். 

உடனே அங்கிருந்த குப்பை தொட்டிகளை எடுத்து சென்று அதே பகுதியில் உள்ள வரி செலுத்தாத மற்றொரு வணிக நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு மேட்டூர் நகராட்சி ஊழியர்கள் வைத்தனர்.

இப்படி குப்பை தொட்டியை வைத்து நூதன முறையில் வரி வசூல் செய்யும் மேட்டூர் நகராட்சியின் நடவடிக்கை வரி செலுத்தாத வணிக நிறுவனத்தினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.