மூணாரில் 2006ம் ஆண்டிற்கு பிறகு பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியப்படுத்தி வருகிறது. மூணார் மலைப்பகுதி முழுவதும் அடியோமு நீல நிலமாக மாறியுள்ளது

கேரள மாநிலம் மலைவாசஸ்தலமான மூணாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக்குழுங்கி வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி எனப்படும் நீலக்குறிஞ்சி மலர்கள் மூணார் மலைப் பகுதியில் மொத்தமாகப் பூக்கத் தொடங்கியுள்ளன. மூணாரில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா பகுதியில் பூத்திருக்கும் குறிஞ்சி மலர்கள் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

பச்சை நிறத்தில் பசுமையாக காட்சியளித்து வந்த மூணார் தற்போது குறிஞ்சி மலர்களால் ஊதா வண்ண நிறத்தில் காட்சியளிக்கிறது.

முன்னதாக 2006ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கிய நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் இந்தப் பூக்கள் பூத்துள்ளன. இந்த அரிய காட்சியை காண 2030ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.

இதே போன்று 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் கொடைக்கானல், நீலகிரி பகுதிகளிலும்  தற்போது பூத்துள்ளன. கொடைக்கானலில் கறுப்பு, வெள்ளை, நீலநிறம் என மூன்று வகையான பூக்கள் பூத்துள்ளன. இதில் அதிகமாக நீலநிற பூக்களை பார்க்க முடியும். இதையடுத்து குறிஞ்சி விழாவை ஒரு மாதம் நடத்த சுற்றுலாதுறை ஏற்பாடு செய்துள்ளது.