Asianet News TamilAsianet News Tamil

முல்லை பெரியாறு அணை விவகாரம்.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.. மத்திய அரசுக்கு திடீர் உத்தரவு..

முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதா? என  மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் என்ன? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 

Mullaperiyar Dam issue - Supreme Court Order
Author
Tamilnádu, First Published Mar 31, 2022, 6:36 PM IST

முல்லை பெரியாறு அணை:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சனைகள் குறித்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கும் விவகாரம் தொடர்பாகவும், அணையின் பாதுகாப்பு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முல்லை பெரியாறு அணை தொடர்பான மேற்பார்வைக் குழுவை தொழில்நுட்பக் குழுவாக மாற்ற பரிந்துரை செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த தொழில்நுட்பக்குழு பரிந்துரை செய்வனவற்றை அந்தந்த மாநில அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக குழு வேண்டுமெனில் உத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் கூறினர்.

தொழில்நுட்பக் குழு:

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'முல்லை பெரியாறு அணையில் எதை செய்வது என்றாலும் கேரள எல்லைக்குள் சென்றுதான் மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஆனால் நிறைய நேரங்களில் கேரளா எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது,' என வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை இரு மாநிலங்களும் சரிவர கடைபிடிப்பது இல்லை என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், 'மேற்பார்வைக்குழுவின் பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பதாகும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா இடையூறு செய்தால் உச்சநீதிமன்றத்தை தமிழகம் நாடலாம்.இதற்காக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றால் கூட அதனை செய்ய தயாராக இருக்கிறோம். கண்காணிப்பு குழு ஒரு தலைப்பட்சமாக நடக்கிறது என மனுதாரர் கூற வேண்டாம். முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு ஒத்துழைக்காவிட்டால் கேரள தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்,' என்று எச்சரித்து வழக்கை மார்ச் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம்:

அதன்படி , இன்று விசாரணைக்கு வந்த முல்லை பெரியாறு விவாகாரம் தொடர்பான வழக்கில், முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதா? என  மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் என்ன? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஆணையங்கள் என்னென்ன அதிகாரங்களுடன் செயல்படும் என எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios