திருச்சி முக்கொம்பு மேலணையில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் நேற்று முன்தினம் இரவும், 9-வது மதகு நேற்று காலையும் உடைந்தன. இது தொடர்பாக கொள்ளிடம் அணையில் முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் உடனிருந்தனர். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது என்றார். இன்னும் 4 நாட்களில் பணி நிறைவடையும் என்று கூறினார். 

திருச்சி முக்கொம்பில் புதிய அணைக்கு மொத்தம் 410 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 325 கோடி ரூபாய் செலவில் 100 மீட்டர் தள்ளி கதவணை கட்டப்படும். மேலும் கொள்ளிடத்தின் வடக்குப்பகுதியில் உள்ள அய்யன்வாய்க்காலிலும் ரூ. 85 கோடியில் கதவணை கட்டப்படும் என முதல்வர் பேட்டியளித்துள்ளார். புதிய கதவணைகள் பணி விரைவில் தொடங்கி 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்றார். 

இந்த மதகு உடைப்புக்கு அதிக அளவில் வெள்ள நீர் வெளியேறியதால் அழுத்தம் காரணமாக பழமையான அணையின் உடைப்பு ஏற்பட்டது. முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்ததிற்கும் மணல் அள்ளியதற்கும் எந்த தொடர்பும் இல்லை, மேலணையில் இருந்து வெகுதொலைவில் உள்ள குவாரியில்தான் மணல் அள்ளப்படுகிறது என்று கூறியுள்ளார். 

கேரளாவின் 80 அணைகளில் இருந்து அதிகளவில் உபரிநீர் வந்ததே கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்காததால் வெள்ளம் ஏற்படவில்லை என முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். முல்லைப் பெரியாற்றில் 142 அடி தண்ணீர் இருப்பு வைக்க கூடாது என்பதற்காகவே கேரள அரசு தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.