சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சிவப்பு கலரில் புதிய பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் பொங்கல் தினத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் (எம்டிசி) சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றை லட்சக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். 

இதில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பஸ்களில் கதவுகள் முறையாக இயங்காதது, பிரேக் பிரச்னை, இன்ஜின் பழுது என்று ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இதனால், மாநகரில் இயக்கப்படுகிற பஸ்களில் பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் மிகப்பெரிய பிரச்னை ஏற்படுகிறது. ஓட்டுனர்களும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

முறையாக பராமரிக்காத காரணத்தால் பஸ்சில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை காரணமாக காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பிரச்னைகளை தடுக்கும் வகையில் புதிய பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இதையேற்ற நிர்வாகம் புதிய பஸ்களை அறிமுகம் செய்ய முடிவு செய்தது. அதன்படி புதிய பஸ்கள் தயாரிக்கப்பட்டு கரூர், பொள்ளாச்சி, குரோம்பேட்டை ஆகிய இடங்களில் பாடி கட்டும் பணி நடக்கிறது. இதில் தாழ்தள படிக்கட்டுகள், தானாகவே மூடி திறக்கும் கதவுகள், இருவர் அமரக்கூடிய இருக்கைகள் ஆகிய வசதிகள் உள்ளன.

மொத்தம் 200 பஸ்கள் இயக்கப்பட உள்ள நிலையில் 160 பஸ்களில் பாடி கட்டும் பணி முழுவதும் நிறைவு பெற்றுவிட்டது. மீதம் உள்ள 40 பஸ்களில் பாடி கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகளும் விரைந்து முடிவடைய உள்ளது. இதையடுத்து பொங்கல் முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் பயணிகளும், டிரைவர்களும் சந்தித்து வந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.