எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்!
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
வேளாண் விஞ்ஞானியும், பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று காலமானார். அவருக்கு வயது 98. பட்டினி இல்லாத இந்தியாதான் என் கனவு என கூறும் அவர், உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலையை மாற்றி, வேளாண் உற்பத்தி பொருட்களை இந்தியா உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கினார்.
வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். நமது தேசத்தின் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில், விவசாயத்தில் அவர் செய்த திருப்புமுனையான பணி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியதுடன், நமது தேசத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தது.” என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரது இழப்பு அறிவியல் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். மிகப்பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
“புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். இந்தியாவின் பசுமைப் புரட்சியின் முக்கிய சிற்பியாக, விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு அத்துறையின் முழு நிலப்பரப்பையும் மாற்றியது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்.” என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை,வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.” என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“பசுமைப் புரட்சியின் தந்தையும், நவீன பாரதத்தை கட்டமைத்தவருமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவர் எப்போதும் நம் இதயங்களிலும் மனதிலும் வாழ்வார். துயர்மிகு இந்நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி!” என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்திய ஒன்றியத்தில் பசுமை புரட்சிக்கு வித்திட்டு, வேளாண் அறிவியலில் பல்வேறு சாதனைகளை படைத்தவர். நாட்டின் உணவு உற்பத்தியை பெருக்குவதற்காக அவரது ஆய்வுகள் அளித்த பலன்கள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். எம்.எஸ்.சுவாமிநாதன் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
“வேளாண்மையில் விஞ்ஞானத்தை புகுத்தி சாதனை படைத்த இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய நிலப்பரப்பில் ஏற்படுத்திய சாதனைகளும் அவர் மேற்கொண்ட வேளாண் ஆராய்ச்சிகளும் இவ்வுலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“எம்.எஸ். சுவாமிநாதனை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.” என ஒபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.