விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாகவும், அவர்களுக்கு வாழ்வளிக்கும் பட்ஜெட்டாகவும் வேளாண் பஜ்ஜெட் அமைந்துள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாகவும், அவர்களுக்கு வாழ்வளிக்கும் பட்ஜெட்டாகவும் வேளாண் பஜ்ஜெட் அமைந்துள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 18 ஆம் தேதி தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் 2 ஆவது காகிதமில்லா பட்ஜெட்ட தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை தமிழகத்தின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனிடையே தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் பற்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில், வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முதலமைச்சர் இளைஞரை போன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளது. கொளத்தூர் தொகுதி மக்களை முதல்வர் தாங்கி வருகிறார். அவர் உழைப்பின் சிகரம். எம்.எல்.ஏ.வாக, முதலமைச்சராக, கட்சித் தலைவராக எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரண புருஷராக இருப்பவர் மு.க.ஸ்டாலின். இப்போது 10 மாத குழந்தையாக உள்ள திமுக அரசு, 10 ஆண்டுகாலத்துக்குப் பின் வளரும் போது விவசாயிகள் எங்குமே கடன் கேட்டு நிற்க மாட்டார்கள். அதற்கான சூழல் இருக்காது. உழவர் நல வாரியத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.3,000 நிதி வழங்கப்பட்டு வருகிறது.

வாழை, மஞ்சள் பயிர்களை பாதுகாக்கும் வகையில் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாகவும், அவர்களுக்கு வாழ்வளிக்கும் பட்ஜெட்டாகவும் இது அமைந்துள்ளது. கரும்பு, நெல், வாழை, கீரை பயிரிடும் விவசாயிகள் அனைவருக்கும் தேவையான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்று இருக்கிறது. தனியார் சர்க்கரை ஆலைக்கான நிலுவைத்தொகை அனைத்தும் முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது. எதிர்கட்சியினரின் கருத்து சிறந்ததாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசு தான் திமுக அரசு. அடுத்த 10 ஆண்டுகளில் வேளாண் துறையில் தமிழ்நாடு அரசு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.