விழுப்புரம்

விழுப்புரத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் தென்பெண்ணை ஆற்று பாலத்தை எம்.பி.காமராஜ், எம்.எல்.ஏ. குமரகுரு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.20 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணி கடந்தாண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 75 சதவீத பணிகள் முடிவடைந்து, மீதமுள்ள பணிகள் தற்போது நடந்து வருகிற நிலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தை கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி. காமராஜ், உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. குமரகுரு ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது அவர்கள் அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் பாலத்தை தரமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் கட்டி முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து காமராஜ் எம்.பி, குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் செய்தியாளர்களிடம், "புதிதாக கட்டப்பட்டு வரும் இந்தப் பாலத்தின் பணிகள் முடிந்தவுடன் மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தப் பாலம் திறக்கப்பட்டால் திருவண்ணாமலையில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் போன்ற நகரங்களுக்கு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் பயண நேரம் குறையும்.

மேலும், திருவண்ணாமலையில் இருந்து திருச்சி மற்றும் தஞ்சாவூர் சாலையை இணைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட சாலை அமைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது முன்னாள் மாவட்ட செயலாளர் கதிர்.தண்டபாணி, மணலூர்பேட்டை நகர செயலாளர் தங்கவேல், மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் பழனிசாமி, திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் ஏ.பி.பழனி,

முன்னாள் திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான மாரங்கியூர் இளங்கோவன், நகர இளைஞரணி செயலாளர் தங்க.பிரகாஷ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.