கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் ஜெ,தீபா பேரவை சார்பாக பேனர் வைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் இருக்கும் மூஞ்சிக்கல் என்ற இடத்தில் தீபாவிற்கு ஆதரவாக பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவிற்கு ஆதரவு பெருக ஆரம்பித்துள்ளது. பேனர்களும், பட்டங்களும், தினமும் தீபாவைச் சந்திக்கும் கூட்டங்களும் அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றம் என்பது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. அதில், முக்கியமான ஒன்றாக, சசிகலாவின் தலைமை.

சசிகலாவை தலைமை ஏற்க வேண்டும் என்று அதிமுக கட்சியில் இருக்கும் தலைவர்கள் தினமும் புது புது பாணியில் அழைத்து ஒருவழியாக அவரை பொதுச்செயலாளர் பதவியில் உட்கார வைத்துவிட்டனர்.

ஆனால், இந்த முடிவை சாமானிய மக்களும், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களும் திட்டவட்டமாக ஏற்க மறுத்துவிட்டனர். யார் இருந்த இடத்தில் யார் இருப்பது, தமிழக மக்களுக்க் என்ன செய்தார் சசிகலா? என்றெல்லாம் கேள்விகள் அம்பாய் புறப்பட்டன.

மக்களுக்குத் தெரியுமா? சசிகலாவை இந்த பொறுப்பில் உட்கார வைக்க அமைச்சர்கள் என்ன் பாடு பட்டார்கள் என்று. எத்தனைப் பேரை பணிய வைத்தார்கள் என்று! அதன் விளைவு சசிகலாவின் தலைமையில் அதிமுக. சசிகலா என்று தனித்து  சொன்னாலும், பின்னால் ஒரு கூட்டமே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அட குடும்பத்தைச் சொன்னேன்.

அன்று அம்மா, அம்மா என்று துதி பாடிய வாய் எல்லாம் இன்று எங்கள் சின்னம்மா என்று வாய் கூசாமல் துதி பாடி பதவியை தக்கவைத்துக் கொள்கின்றனர்.

இது ஒருபுறம், மறுபுறத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ஏன் என்னை அத்தையை பார்க்கவிடவில்லை? என்று கேள்வியில் தனியாக தமிழக மக்களுக்கு அறிமுகமாகி  இன்று அனைவரின் ஆதரவையும் பெற்று வருகிறார்.

தீபாவை பார்த்தவர்களுக்கும், அவரது குரலைக் கேட்பவர்களுக்கும் ஜெயலலிதா போலவே இருக்கிறது என்று பேசிக் கொள்கின்றனர்.

தீபாவிற்கு ஆதரவு பெருக பெருக அவர், இளைய தலைவி, இளைய புரட்சித்தலைவி, சின்னத்தாய் என்ற பல பட்டங்களைச் சுமந்து ஜெ.தீபாவாக உருவெடுத்துள்ளார்.

வாட்ஸ் ஆப்பில் குழு, பல்வேறு பகுதிகளில் தீபாவின் ஆதரவு பேனர்கள், முக்கியமான ஒன்று மக்களின் ஆதரவும் தீபாவிற்கு பெருகி வருகிறது.

தனியாக வந்த தீபாவிற்கு தமிழகத்தில் ஆதரவு பெருகி தற்போது ஜெ.தீபா பேரவை உருவாகி ஒரு கூட்டமே சேர்ந்துள்ளது. அட இது தொண்டர்கள் கூட்டம்.

அந்த ஆதரவு ஜெயாவின் உறவு என்பதாலா, ஜெயாவின் சாயல் என்பதலா, அவரை வேண்டும் என்றே ஒதுக்கிய சசிகலாவின் மீதான வெறுப்பு என்பதாலா என்பதெல்லாம் வரப்போகும் காலங்களில் வெளிப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை…