பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை வெடிவைத்து இடிக்கப்படுகிறது. இதையொட்டி, அந்த கட்டிடத்தின் வெளி பகுதியின் நின்று ஏராளமான மொபைல் பிரியர்கள் செல்பி எடுத்து கொள்கின்றனர்.
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த இரண்டு 11 மாடி கட்டிடங்களில் ஒரு கட்டிடம், கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 28ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 61 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இதைத்தொடர்ந்து, அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டிடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்தபோது, அதுவும் பலவீனமாக இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பான, வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ.) அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். கட்டிடம் வெடிமருந்து வைத்து இடிக்கும் பணி ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, 11 மாடி கட்டிடத்தை இடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து நாளை இந்த கட்டிடம் வெடிவைத்து இடிக்கப்படுகிறது.

இது தொடர்பாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், காஞ்சீபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மவுலிவாக்கம் கிராமம், போரூர் – குன்றத்தூர் சாலை, நிலபுல எண்.17 பகுதியில் அமைந்துள்ள 11 அடுக்குகள் கொண்ட கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது.

பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இக்கட்டிடத்தை இடிக்குமாறு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதன்படி மவுலிவாக்கத்தில் உள்ள பாதுகாப்பற்ற 11 அடுக்கு மாடி கட்டிடம் 2–11–2016 புதன்கிழமை (நாளை) மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் இடிக்கப்படவுள்ளது.
இக்கட்டிடம் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வெடிமருந்துகள் உபயோகித்து பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்து கட்டிடம் அதே இடத்தில் உள்நோக்கி விழும் வகையில் இடிக்கப்படவுள்ளது. இடிக்கப்படும் இக்கட்டிடத்தைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து கட்டிடங்களின் தற்போதைய நிலை, பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றால் இணைந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

11 அடுக்குகள் கொண்ட இக்கட்டிடம் இடிக்கப்படும் பொழுது பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு முன்னேற்பாடுகள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவாக செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் வசதிக்காக தற்காலிகமாக தங்குவதற்கு மதனந்தபுரம் பிரதானசாலை, எண்.199ல் அமைந்துள்ள ஸ்ரீ.எஸ்.ஏ.கே. ஜெய் மாருதி மஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய மஹாலுக்கு செல்ல கட்டணமில்லா பஸ் வசதியும் செய்துதரப்படவுள்ளது.

இடிக்கப்படும் கட்டிடத்திற்கு அருகில் முன்னெச்சரிக்கையாக 2 தீயணைப்பு வாகனங்கள், 4 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். 100 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கட்டிடம் இடிப்பது குறித்தும், மாற்று இடத்திற்கு செல்வது குறித்தும் தனித்தனியாக அறிவிப்பு சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக வழங்கப்படும்.
இடிக்கப்படுவதற்கு முன்பு காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வெளியேறி விட்டார்களா என்பதை உறுதி செய்தபின்புதான் இடிக்கும் பணிமேற்கொள்ளப்படும். கட்டிடம் இடிக்கப்படுவது குறித்து அப்பகுதி பொதுமக்கள் எவ்வித அச்சமோ, பீதியோ அடையத்தேவையில்லை.
கட்டிடம் இடிக்கப்படும் பணி முடிவடைந்தவுடன் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு உரிய அறிவிப்பு வழங்கப்படும். எனவே, அப்பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மொபைல் பிரியர்கள் ஏராளமானோர், இன்று காலை முதல் முகலிவாக்கம் பகுதியில் குவிந்துள்ளனர். இடிக்கப்படும் அடுக்குமாடி கட்டிடம் போரூர் – குன்றத்தூர் சாலையில் இருந்து தெரிகிறது. இதனால், அந்த கட்டிடத்தின் முன்பகுதியில் நிற்பதுபோல் குழுவாகவும், செல்வியும் எடுத்து கொண்டு இருக்கின்றனர்.
ஒருபுறம் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் திணறி வரும் வேளையில், செல்பி எடுக்க வருபவர்களை, அங்கிருந்து அப்புறப்படுத்துவது பெரும் சிரமமாக இருக்கிறது என புலம்புகின்றனர்.
