mother son murdered in trichy
திருச்சி அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் தாய், மகனை அடித்துக் கொடூரமாக கொலை செய்து, பின்னர் சடலங்களின் மேல் டிராக்டர் ஏற்றி நசுக்கிய கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ராஜகோபால். அதே பகுதியில் ராமசாமியின் தங்கை தனபாப்பு வசிக்கிறார். இவரது மகன் சத்திய மூர்த்தி. ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். தற்போது, பள்ளி விடுமுறை என்பதால், தாயை பார்க்க சொந்த ஊர் வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ராமசாமி, தங்கை தனபாப்புவிடம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் கடன் கேட்டுள்ளார்.
அண்ணன் கேட்டார் என்பதற்காக தனபாப்பு, பெரும் தொகையினை வெளிநபர்களிடம் இருந்து கடனாக வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் ராமசாமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தந்தை இறந்த வேதனையில், ராஜகோபாலுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்தனர். பின்னர் ராஜகோபால் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதற்கிடையில், ராமசாமிக்காக தனபாப்புவிடம் கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கேட்டனர். அவரால், கொடுக்க முடியவில்லை. இதனால், ராஜகோபாலிடம் அந்த பணத்தை கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனபாப்பு, மகன் சத்தியமூர்த்தியுடன் நேற்று இரவு சாப்பிட்டு தூங்கினார். இன்று அதிகாலையில் அவரது வீட்டுக்கு சென்ற ராஜகோபால், அங்கு தூங்கி கொண்டிருந்த தனபாப்பு, அவரது மகன் சத்தியமூர்த்தி ஆகியோரை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி அடித்து கொலை செய்தார்.
அப்போதும் ஆத்திரம் தீராத ராஜகோபால, வீட்டில் கிடந்த 2 சடலங்களையும் வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து சாலையில் போட்டு, சடலங்களின் மீது டிராக்டரை ஏற்றி நசுக்கிய அவர், டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றார்.
தகவலறிந்து லால்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராஜகோபாலை வலைவீசி தேடி வருகின்றனர்.
