திண்டுக்கல்

நிலத்தை அபகரித்துக் கொண்டும், அது குறித்து கேட்டதற்கு சாதியை சொல்லி திட்டியும் அடித்தும் துன்புறுத்தியதால் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அம்மா, மகள், மருமகன் தீக்குளிக்க முயற்சித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று, ஒரு மூதாட்டி உள்பட மூவர் மனு மற்றும் கையில் பதாகைகளை ஏந்தியபடி வந்தனர்.

அந்தப் பதாகையில் “தலித் கன்னியப்பன், சீனியம்மாள், வளர்மதி ஆகியோருக்கு சாதி இழிவு, நிலஅபகரிப்பு, கொலை மிரட்ட விடுத்த சாதி வெறியன் செல்லமுத்துவை கைதுசெய்ய மறுக்கும் அம்பிளிக்கை காவல்துறையை கண்டித்து தீக்குளிப்பு” என்று எழுதப்பட்டு இருந்தது.

இதனையடுத்து காவலாளர்கள் விரைந்துச் சென்று அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களிடம் காவலாளர்கள் நடத்திய விசாரணையில், “ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையத்தை சேர்ந்த காளியப்பன் மனைவி சீனியம்மாள் (60), அவருடைய மகள் வளர்மதி (42), மருமகன் கன்னியப்பன் (45) என்பது தெரிய வந்தது.

மேலும் தமிழக அரசு சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு சீனியம்மாளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை விராலிக்கோட்டையைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் அபகரித்துள்ளார். அதுபற்றி கேட்டபோது தன்னை சாதியை சொல்லி திட்டி அடித்ததாகவும், அதனால் மகள் மற்றும் மருமகனுடன் தீக்குளித்து தற்கொலை செய்வதற்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததாகவும் சீனியம்மாள் தெரிவித்தார்.

இதனையடுத்து காவலாளர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறி, மனு கொடுக்க அழைத்து சென்றனர்.