விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தாலுகா டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி மலர் (40). இவர்களுக்கு இலட்சுமி (21), சோனியா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

நேற்று காலை மலர் தனது இரண்டு மகள்களுடன் விழுப்புர்ம மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். ஆட்சியர் அலுவலக நுழைவுவாயின் முன்பு அவர்கள் மூவரும் வந்தனர். அப்போது திடீரென தங்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் கேனில் இருந்த மண்ணெண்ணெயை அவர்கள் உடலின்மீது ஊற்றிக்கொண்டனர். பின்னர் தீக்குச்சியை பற்ற வைத்து தீக்குளிக்க முயன்றனர்.

இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் விரைந்து சென்று அவர்கள் மூவரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கினர். அதன்பின்னர் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அவர்களை விழுப்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மலர், "எங்கள் கிராமத்தில் வசித்து வரும் சிலர் முன்விரோதம் காரணமாக எங்களை கேட்காமல் ஒரு பத்திரத்தில் அவர்களாகவே எழுதிக்கொண்டு எங்களை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டனர்.

பின்னர் நாங்கள் குடியிருந்த வீட்டை முற்றிலும் இடித்து சேதப்படுத்திவிட்டனர். இதுபற்றி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.  அவர்களிடம் காவலாளர்கள் பணம் பெற்றுக்கொண்டு எங்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். 

எனவே, எங்களது வீட்டை இடித்து சேதப்படுத்தியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அழுது முறையிட்டார்.

இதுகுறித்து காவலாளர்கள், "மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுச்சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தனர். 

மேலும், "ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது" என்று அவர்கள் மூவரையும் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.