More than 500 women held in struggle
தேனி
தேனியில் சாராயக் கடைகளை மூடக்கோரி ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால் சாராயக் கடை மீது கல் வீசினர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகரில் இரண்டு சாராயக் கடைகள் செயல்படுகிறது. இந்த சாராயக் கடைகளுக்கு மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இந்தக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆண்டிப்பட்டியில் செயல்படும் இரண்டு அரசு சாராயக் கடைகளை மூட வேண்டும் என்று 500–க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடையை திறக்கவிடாமல் கடை முன்பு உட்கார்ந்து முற்றுகைப் போராட்டமும் நடத்தினர். சாராயக் கடைகளை மூடப்படும் வரை இந்த இடத்தைவிட்டு நகரப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
ஒருமணி நேரம் தாண்டியும் நடந்த இந்த போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராத காரணத்தால் ஆத்திரமடைந்த பெண்கள் சாராயக்கடை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளர்கள் தடுத்தும் பெண்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நீண்ட நேரம் ஆகியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால் பெண்கள் ஆண்டிப்பட்டி – பாலக்கோம்பை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவலாளர்கள் பெண்களை கலைந்து செல்ல வலியுறுத்தியதால் காவலாளர்களுக்கும், பெண்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் போராட்டம் நடத்திய பெண்களிடம் ஆண்டிப்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் குலாம், தாசில்தார் சுந்தர்லால் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெண்கள் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் அந்தப் பகுதிகளில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
