நாகப்பட்டினம்

கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவுத் தெரிவித்து நாகையில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளைக் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.

கடந்த மாதம் 30–ஆம் தேதி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து கதிராமங்கலத்தைச் சேர்ந்த மக்கள் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து கடந்த 1–ஆம் தேதி முதல் கதிராமங்கலம் மக்கள் கடையடைப்பு உள்ளிட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவுத் தெரிவித்து போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக நாகையை அடுத்த புத்தூரில் உள்ள பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜோதிபாசு, மாவட்டத் துணைத் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

“கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட 10 பேரை உடனே விடுவிக்க வேண்டும்.

கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுக்க கூடாது என்று போராடும் மக்களின் கோரிக்கையை ஏற்று திட்டத்தை கைவிட வேண்டும்.

கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கதிராமங்கலத்தில் குவிக்கப்பட்டுள்ள காவலாளர்களை உடனே வெளியேற வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு நடவக்கை மேற்கொள்ள வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் விஜயேந்திரன், ஸ்டாலின், ரமணி உள்பட 500–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.