More than 300 affected by mysterious fever People complain that the hospital is a health hazard
பண்ணைக்காடு பேரூராட்சிப் பகுதிகளில் கடந்த பத்து நாள்களில் மர்ம காய்ச்சலால் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவமனையில் படுக்கை வசதி இருந்தும் நேயாளிகளை தங்க வைக்க மறுக்கின்றனர் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு பேரூராட்சி பகுதிகளில் கடந்த 10 நாள்களில் மர்ம காய்ச்சலால் 300–க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அங்கு அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களுக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், காய்ச்சல் பரவாமல் தடுக்க மருத்துவக் குழுவினர் பேரூராட்சிப் பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு நடத்தினர்.
அப்போது, “வைரஸ் காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் அங்கு உற்பத்தியாகிறது” என்பது கண்டறியப்பட்டது. அதனை ஒழிக்கும் நடவடிக்கையில் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது:
“பண்ணைக்காடு பகுதியில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே மக்கள் தண்ணீரைக் காய்ச்சி பயன்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டிகளை திறந்த நிலையில் வைக்க கூடாது” என்றனர்.
“மருத்துவமனையில் படுக்கை வசதி இருந்தும் நேயாளிகளை தங்க வைக்க மறுக்கின்றனர் என்றும் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அனுப்பி விடுகின்றனர் என்றும் மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், “மருத்துவமனை சுகாதார கேடாக உள்ளது” என்று மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
