சிவகங்கை  

ஆடிப்பெருக்கு திருவிழாவையொட்டி சிங்கம்புணரி முத்துவடுகநாதர் கோவிலில் மலைபோல் குவித்து வைக்கப்பட்ட சாதத்தை சாமிக்கு படைத்துவிட்டு அன்னாதனம் இட்டதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஆடிப்பெருக்கு திருவிழாவையொட்டி புகழ்பெற்ற சித்தர் முத்துவடுக நாதர் கோவில், வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதிநகர் நொண்டிகருப்பர் ஆகிய கோவில்களில் அடியார்களுக்கு அன்னதான விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு பூசைகள் நடைபெற்றன. பின்னர் சித்தர் வடுகநாதர் வெள்ளி சிறப்பு அலங்காரத்தில் அடியார்களுக்கு காட்சி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து மலைபோல் குவித்து வைக்கப்பட்ட சாதத்திற்கு சிறப்பு பூசை செய்யப்பட்டு அதன்பின் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிங்கம்புணரி, பிரான்மலை, காளாப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தில் இருந்தும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அன்னதான விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவையொட்டி ஏராளமான காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சித்தர் முத்து வடுக நாதர் கோவிலில் வணிகர் நலச்சங்கம் மற்றும் அன்னதான குழு சார்பாக இந்த அன்னதானம் நடைபெற்றது.