Asianet News TamilAsianet News Tamil

திட்டவட்டமாக அறிவித்து மறியல் செய்த பெண்கள்; அலறி அடித்து ஓடிவந்த காவல்துறை…

more than-200-women-participated-in-road-block-strike-p
Author
First Published Dec 20, 2016, 8:03 AM IST


கடமலைக்குண்டு

கடமலைக்குண்டு அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்யவந்த 200க்கும் மேற்பட்ட பெண்களிடம் அலறி அடித்து ஓடிவந்த காவல்துறை மற்றும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை எடுபடாததால், அந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாயினர்.

தேனி மாவட்டம் கடமலை – மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு அருகே உள்ளது துரைச்சாமிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன.

இந்த கிராமத்திற்கு வைகை ஆற்றில் உறை கிணறு அமைத்தும், சீலையம்பட்டி முல்லைபெரியாற்றில் இருந்தும் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாகவும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மழை இல்லாத காரணத்தால், கடந்த ஒரு வருடமாக வற்றிய நிலையில் காணப்படுகிறது வைகை ஆறு.

இதனால் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணற்றில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே தண்ணீர் வற்றிவிட்டத்து. எனவே, துரைச்சாமிபுரம் கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, குடிநீருக்காக அல்லல் படும் நிலைமையும் உண்டாயிற்று.

அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம மக்கள் சின்னமனூர் சாலையில் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதியளித்தனர். அதன்படி, கிராமத்திற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த கிராமத்திற்கு மீண்டும் குடிநீர் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தனர். மேலும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

இதனால் அந்த பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களுக்குச் சென்று குடிநீர் கொண்டுவருகின்றனர் இந்த ஊர்மக்கள்.

இந்த நிலையில் நேற்று, துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு தேனி சாலையில் மறியலில் ஈடுபடுவதற்காக காலிக் குடங்களுடன் வந்து கொண்டிருந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும், அலறி அடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிப்பட்டி காவல் துணை சூப்பிரண்டு குலாம் மற்றும் காவலாளர்கள் மறியலில் ஈடுபடும் முன்பே அந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், ஊராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் வடிவேல், கடமலை – மயிலை ஒன்றிய ஆணையர்கள் சுருளிவேல், ஜெகதீஸ்சந்திரபோஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், இதில் அவர்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஏராளமான காவலாளர்கள் வரவழைக்கப்பட்டு தங்களது வழக்கமான நடவ்வடிக்கையாக 200 பெண்களையும் கைது செய்தனர். அந்த பெண்களும் வீரமாக காவல் வாகனத்தில் ஏறி கைதாயினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்கள் அனைவரும் வழக்கம்போல மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து துரைச்சாமிபுரம் கிராமத்தில் நேற்று பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பெண்கள் நினைத்தால் யாவும் சாத்தியம் என்பதை துரைச்சாமிபுரம் கிராமத்து பெண்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios