நாகப்பட்டினம்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 1000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்று ஒன்றிணைந்த, மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் மாணவ, மாணவிகள் அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.

அதேபோன்று, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் பி. மாரியப்பன் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாநில துணைத் தலைவர் வா.சிங்காரவேலன், மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் மு. குமரேசன், வெ.ராஜேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் பங்கேற்ற இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நீட்-க்கு எதிராகவும், அனிதாவின் சாவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.