நாமக்கல்

இராசிபுரத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து வெற்றுக் குடங்களுடன் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட, இராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு அண்ணா நகர், நேதாஜி நகர், இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இந்தப் பகுதிகளுக்கு கடந்த ஆறு மாத காலமாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகிக்கவில்லை.

ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வெற்றுக் குடங்களுடன் நேற்று காலை முள்ளுக்குறிச்சியில் சாலை மறியல் நடத்தினர்.

அப்போது அவர்கள், “ஆறு மாத காலமாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை” என்றும், “ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனவும் குற்றம் சாட்டினர்.

அதேபோல், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து விட வேண்டும், ஆபரேட்டரை மாற்ற வேண்டும்” எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் “வீடுகளில் தனி பைப்லைன் வைத்திருப்பவர்கள் மோட்டார் மூலம் அதிக தண்ணீரை உறிஞ்சிவிடுகின்றனர்” என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

சாலைமறியல் பற்றி தகவலறிந்த ஆயில்பட்டி காவலாளர்கள் அங்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் சமரசம் அடையவில்லை.

இதனையடுத்து நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தா, நாமகிரிபேட்டை காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளித்தனர்.

அதன்பேரில் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இந்த சாலை மறியல் காரணமாக மெட்டாலா - தம்மம்பட்டி சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.