தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான மோன்தா புயல், சென்னையிலிருந்து 480 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தீவிர புயலாக வலுப்பெற்று நாளை மாலை ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து 480 கி.மீ. தொலைவில் உள்ள மோன்தா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மாலை அல்லது இரவு ஆந்திராவில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுப்பெற்றது. இந்த மோன்தா புயல் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறவுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
480 கிலோ மீட்டர் தொலைவில் புயல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"நேற்று (26-10-2025) இரவு 11:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் "மோன்தா" புயலாக வலுப்பெற்றது. இன்று (27-10-2025) காலை 8:30 மணி நிலவரப்படி, இந்தப் புயல் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது, சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது." என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையை கடக்கும் நேரம் மற்றும் எச்சரிக்கை
இந்தப் புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்டோபர் 28) காலை தீவிரப் புயலாக வலுப்பெறும். அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில், நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் தீவிரப் புயலாகக் கரையை கடக்கக்கூடும்.
அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை
இந்த புயல் காரணமாகத் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (அக்டோபர் 27) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (அக்டோபர் 28) திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
'மோன்தா' புயல் நாளை மாலை அல்லது இரவுக்குள் 110 கி.மீ வேகத்தில் தீவிர புயலாக காக்கிநாடாவை சுற்றியுள்ள பகுதிகளில் கரையை கடக்கும் என என்றும் மீனவர்கள் வரும் அக்டோபர் 31 வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
