Asianet News TamilAsianet News Tamil

சிங்கவால் குரங்குகளின் சாவுக்கு சுற்றுலாப் பயணிகளே காரணம்…

monkeys death-valparai-tamilnadu
Author
First Published Oct 10, 2016, 11:29 PM IST


சுற்றுலா பயணிகளின் அத்துமீறிய செயலால், சிங்கவால் குரங்குகள் இறக்கின்றன. அவற்றை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி, வால்பாறை வனச்சரக வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், புலிகள், கரடிகள், பாம்புகள், காட்டெருமைகள், செந்நாய்கள், கருஞ்சிறுத்தைகள், அரியவகை பறவைகள் வாழ்ந்து வருகின்றன. இதில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் சிங்கவால் குரங்குகள் உள்ளன. இவைகள் வால்பாறை புதுத்தோட்டம், மானாம்பள்ளி, அக்காமலை, அய்யர்பாடி, குரங்குமுடி, மலைப்பகுதி சாலை ஓரங்களில் அதிகம் இருக்கின்றன.

ஆரம்ப காலத்தில் சிங்கவால் குரங்குகள் மனிதர்களை கண்டால் ஓடி மரங்களின் உச்சிக்கு சென்று ஒழிந்து கொள்ளும். இந்த சிங்கவால் குரங்குகள் சாலை ஓரங்களில் உள்ள வனப்பகுதிகளில் இருக்கும் மரங்களுக்கு வந்து ஒரு வனப்பகுதியை விட்டு அருகே இருக்கும் மற்றொரு வனப்பகுதிக்கு சென்றுவிடும். அவ்வாறு சாலை ஓரங்களுக்கு வரும் சிங்கவால் குரங்குகளை சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுக்கிறார்கள். பின்னர் சுற்றுலா பயணிகள் தின்பண்டங்களை குரங்குகளிடம் வீசிவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் இதுபோன்ற செயலால், உணவுப் பொருட்களைத் தேடி சாலைக்கு வரும் சிங்கவால் குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பது அதிகரித்துள்ளது. அழிந்து வரும் விலங்கின பட்டியலில் உள்ள சிங்கவால் குரங்குகளை பாதுகாக்கும் முயற்சியில் வனத்துறையினரும், இயற்கை வனவள பாதுகாப்பு மையத்தினரும் சிறப்பு பணியாளர்களை பணியில் அமர்த்தி சிங்கவால் குரங்குகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கவால் குரங்குகள் அதிகளவில் சாலைகளில் உலா வரும் புதுத்தோட்டம் பகுதியில் வனத்துறை சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் குரங்குகளுக்கு உணவுகள் போடவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரொட்டிக்கடை பகுதியில் இருந்து வால்பாறை நகர் பகுதிக்கு செல்லும் வரை சுற்றுலா பயணிகள் வாகனங்களை மெதுவாக ஓட்ட வேண்டும் என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால், வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த அறிவிப்புகளை மீறி சாலை ஓரங்களில் உணவுப்பொருட்களை வீசி விட்டு செல்கின்றனர். உணவுப்பொருட்களை சிங்கவால் குரங்குகள் எடுத்து சாப்பிட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகளின் இதுபோன்ற அத்துமீறும் செயல்களால் அரியவகை சிங்கவால் குரங்குகள் அழிந்து வருகின்றன.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள், “வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் வீசிச்செல்லும் உணவு மற்றும் தின்பண்டங்களை சிங்கவால் குரங்குகள் சாப்பிடுகின்றன. இதனால், அவற்றின் உணவு பழக்கங்கள் மாறி உடல் நலக்குறைபாடு ஏற்படுகிறது. இதுபோன்று உணவுப்பொருட்களை சாப்பிட தொடங்கியதால் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளில் உள்ள உணவுப்பொருட்களை எடுத்து சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகளவில் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வீடுகளுக்குள் நுழையும் சிங்கவால் குரங்குகள் வீட்டில் பொருட்களை உடைத்து சேதப்படுத்துகிறது. சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களின் மீதும் ஏறிக்கொண்டு உணவு பொருட்களை தேடுகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு சிங்கவால் குரங்குகள் இறந்து விடுகின்றன.

எனவே, வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி நடந்து கொள்ளக்கூடாது. வனத்துறையின் எச்சரிக்கைகளை பின்பற்றி வனவிலங்குகள் மற்றும் அரியவகை சிங்கவால் குரங்குகளுக்கு உணவுப்பொருட்களை போடுவதை தவிர்க்கவேண்டும்” என்று அவர்கள் கூறினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios