உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கையில் பணம் வசூல் செய்யப்பட்டதைக் கண்டித்து, மாணவர்கள் சங்கம் போராட்டம் நடத்தினர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி மையத்தின் செயல்பாட்டை கண்டித்து போராட்டம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆன்–லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கையில் மாணவர்களிடம் இலஞ்சம் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இதேபோல் தொடர்ந்து மாணவர் சேர்க்கையில் பணம் வசூலித்தது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது.
இதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர தலைவர் சிவகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், துணை செயலாளர் பழனி, இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
இதில் இந்திய மாணவர் சங்க நகர செயலாளர் சின்னராசு, மாநில குழு சுபாஷினி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் மார்த்தாண்டன், நகர செயலாளர் சதீஷ்குமார், இந்திய மாணவர் சங்க நகர தலைவர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முருகன் நன்றி கூறினார்.
