பாத்திரக்கடையில், போலி முகவரி, செல்போன் நம்பர் கொடுத்து வேலை செய்த வாலிபர், ரூ.84 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றார். அவரை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை ஓட்டேரி எத்திராஜி தெருவை சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் (37). ஸ்டான்ரஸ் சாலையில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த 27ம் தேதி ஒரு வாலிபர், கோட்டீஸ்வரன் கடைக்கு சென்றார். அப்போது அவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வசிப்பதாகவும், வேலை இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், குடும்பம் நடத்த முடியாமல் தவிப்பதாகவும் கூறினார். இதை கேட்ட கோட்டீஸ்வரன், அவரது விலாசம், செல்போன் நம்பரை வாங்கி கொண்டு வேலையில் சேர்த்தார்.

அன்று வியாபாரம் முடிந்ததும், கோட்டீஸ்வரன் வரவு செலவு கணக்கு பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்றார். அடுத்தநாள் காலை வழக்கும்போல் கடையை திறந்து வியாபாரத்தை கவனித்தார். ஆனால், குமரேசன் வரவில்லை.

இதையடுத்து முதல்நாள் வியாபாரம் செய்த ரூ.84 ஆயிரத்தை வங்கியில் கட்டுவதற்காக கல்லாவை திறந்தார். அப்போது அதில் பணம் இல்லாமல் அதிர்ச்சியடைந்தார். இதில் சந்தேகமடைந்த அவர், குமரேசனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனே அவர் கொடுத்த விலாசத்தில் விசாரித்தபோது, போலி என தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டீஸ்வரன், புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.