கிருஷ்ணகிரி

விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்க காரணமான பிரதமர் மோடி நாளை தமிழகம் வருவதால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகள், கடைகள், கடை வீதிகளில் கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று பல்வேரு அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட  திமுக செயலாளர் ஒய்.பிரகாஷ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும் ஏப்ரல் 12-ல் தமிழகம் வரும் பிரதமருக்கு எதிர்ப்புத் தெரிவித்து,  அனைவரும் கறுப்பு உடையணிந்து,  வீடுகளில் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

அதனடிப்படையில்  தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் கட்சியினர் வீடுகளிலும், கிராமப்புற விவசாய மக்கள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள் வீடுகள்,  கடைகள் மற்றும் பொதுமக்கள் வீடுகளிலும் கருப்புக் கொடியேற்றி  எதிர்ப்பினை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

அதேபோன்று, வணிகர் சங்க பேரவையின் மாவட்டச் செயலாளர் ஏ.சி.வேலரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் காவிரி நீரில் தமிழக மக்களின் உரிமைக்காக போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாகி உள்ள நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை தமிழகத்தை வஞ்சிக்கிறது. 

இதுபோன்ற நிலைக்கு காரணமான பாரத பிரதமர், தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதி வருகை தர உள்ள நிலையில், அவருக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடைகள், கடை வீதிகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிப்பையும் உணர்வையும் வெளிப்படுத்த வேண்டும்" என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.