வெள்ளத்தில் வீடும் போச்சு... விவசாயமும் மொத்தமாக போய்டுச்சு.. அவசர அவசரமாக மோடிக்கு கடிதம் எழுதிய வைகோ
வெள்ளம் காரணமாக விவசாயிகள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல், விளைபொருட்கள் அழிந்துவிட்டன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
வெள்ளம் பாதிப்பால் மக்கள் அவதி
நெல்லை, தூத்துக்குடி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பாய்வதால் மீட்பு பணி மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து பெருவெள்ள பாதிப்புகளிலிந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களை மீட்டெடுக்க உதவுங்கள் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகியற்றில் கடந்த 2 நாட்களில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய நிவாரணம் மற்றும் நிதியுதவி வழங்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
விவசாயம் அழிந்து விட்டது
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், அவை பெருமளவில் சேதமடைந்துள்ளன. மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. வெள்ளம் காரணமாக விவசாயிகள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல், விளைபொருட்கள் அழிந்துவிட்டன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். பல மதகுகள் மற்றும் குளங்கள் உடைந்து கிராமப்புற சாலைகள், நெடுஞ்சாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், இரயில் மற்றும் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
நிவராண உதவி செய்திடுக
அனைத்து இடங்களிலும் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்விடங்கள் முழுமையாகவும், சில இடங்களில் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. கிராமங்களில் உள்ள மண் சுவர் குடிசைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எனவே, தயவு செய்து மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்ய ஆய்வுக் குழுவை அனுப்பவும், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி மற்றும் நிவாரணங்களை வழங்கவும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி, விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக வைகோ தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்