தமிழக முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவு யாருக்கு என்று ஆளுநர் தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனியார் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில்தான் அவர்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அந்தந்த மாவட்ட அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்த தகவல்கள் உண்மையா? என்பது குறித்து ஆளுநர் விசாரிக்க முடியாது.

ஆனால், அவர்கள் ஆதரவு வாக்குகளை அளிக்கும்போது சுதந்திரமாக அளிப்பதற்கான வாய்ப்புகளை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் தனித்தனியாக ஒவ்வொருவரிடத்திலும் விசாரிக்க வேண்டும். குடியாட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி ஆதரவு பெறுவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

அதே நேரத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுதந்திரமாக தங்களது கருத்துகளைக் கூற அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்து உள்ளார்.