Asianet News TamilAsianet News Tamil

சாராயக் கடைகளில் பணம் கேட்டு மிரட்டும் எம்.எல்.ஏ; ஆட்சியரிடம் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் பரபரப்பு புகார்…

MLA threaten liquor shops workers asking money staffs filed complaint against mla
MLA threaten liquor shops workers asking money staffs filed complaint against mla
Author
First Published Aug 8, 2017, 7:44 AM IST


ஈரோடு மேற்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் சாராயக் கடைகளில் பணம் கேட்டு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம், ஆள் வைத்து மிரட்டுவதாக டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

டாஸ்மாக் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று புகார் மனு ஒன்றை கொடுக்க வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரை சந்தித்து அந்த மனுவைக் கொடுத்தனர்.

அதில், “ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் சாராயக் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அதிகமான பணிச் சுமைக்கும், சிரமங்களுக்கும் இடையே வேலை செய்கின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு மேற்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் சாராயக் கடைகளின் மேற்பார்வையாளர்களை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம் தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பேசினார்.

அப்போது கடை ஒன்றுக்கு தினசரி ரூ.700 வீதம் மாதந்தோறும் ரூ.21 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றுத் தெரிவித்தார். ஆனால், பணம் கொடுக்க முடியாது என்று மேற்பார்வையாளர்கள் தெரித்துவிட்டனர்.

கடந்த 3–ஆம் தேதி ஈரோட்டில் உள்ள சில டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு சிலர் சென்று எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு தரவேண்டிய பணத்தைக் கொடுக்குமாறு மிரட்டினர். அதற்கும் பணம் கொடுக்க முடியாது என்று கடையின் ஊழியர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து 4–ஆம் தேதி சிலர் கும்பலாக கடைகளுக்குச் சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி, தாலுகா ஆகிய காவல் நிலையங்களில் சம்பந்தப்பட்ட கடையின் ஊழியர்கள் புகார் கொடுத்தனர்.

மாவட்ட மேலாளருக்கும் தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தலையிட்டு கடை ஊழியர்களிடம் பணம் கேட்டு தொல்லை கொடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் செய்யப்படவில்லை.

எனவே, இந்தப் பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios