Asianet News TamilAsianet News Tamil

பொங்கல் விடுமுறைக்கு ஆப்பு வைத்த மத்திய அரசின் செயல் ஒரு பண்பாட்டுத் தாக்குதல் …. மு.க.ஸ்டாலின் கண்டனம்….நாளை ஆர்ப்பாட்டம்…

mkstaline statement
Author
First Published Jan 10, 2017, 6:06 AM IST


பொங்கல் விடுமுறைக்கு ஆப்பு வைத்த மத்திய அரசின் செயல் ஒரு பண்பாட்டுத் தாக்குதல் …. மு.க.ஸ்டாலின் கண்டனம்….நாளை ஆர்ப்பாட்டம்…

 கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் திருநாள் நீக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. அறிவித்துள்ளது.

தமிழர் திருநாள் என அழைக்கப்படும் பொங்கல் திருநாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தைத்திங்கள் முதல் நாளை தமிழ் மக்கள்  தமிழ்ப் புத்தாண்டாகவும் கொண்டாடி வருகின்றனர்.


ஏற்கனவே தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையையொட்டி நடைபெறும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு அனுமதி கிடைக்காமல் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறைப் பட்டியலிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

 

இது தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும். மத்திய அரசு தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்திவரும் செயலினைக் கண்டிக்கும் வகையில் தி.மு.க.வின் சார்பில் நாளை  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பொங்கல் விழாவையொட்டி மத்திய அரசு தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுவந்த கட்டாய விடுமுறையை இப்போது விருப்ப விடுமுறையாக மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் திருநாள் என்பது தமிழகம் முழுவதும் சாதி-மத வேறுபாடுகள் கடந்து அனைவரும் கொண்டாடும் கலாசார விழாவாகும். இதற்கான விடுமுறையை கட்டாய விடுமுறையிலிருந்து மத்திய அரசு நீக்குவது என்பது இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சியாக தெரியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் ரெயில்வே, அஞ்சல் துறை, வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்கள் பொங்கல் நாளினை பொதுவிடுமுறையாகக் கழிக்க முடியாமல், விருப்பமிருந்தால் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என நிர்ப்பந்திப்பது தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்படும் பண்பாட்டுத் தாக்குதலாகும்எனவும் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

காஷ்மீர் முதல் தமிழகம் வரையிலான இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தவரின் தாய்மொழிகள் மீது இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் நடவடிக்கையாலும், புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில் மதவாதக் கொள்கைகளைப் புகுத்தும் முயற்சியாலும் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை கேள்விக்குறியாக்கும் விதத்தில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்றும்  அதன் உச்சகட்ட வெளிப்பாடாக, தமிழர் திருநாளான பொங்கல் விழாவுக்கான கட்டாய விடுமுறையை ரத்து செய்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios