M.K.Stalin statement against the central govt act about Bulls

இந்தியா முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்தத் தடையின் மூலமாக மதச் சுதந்திரம், தனிமனிதச் சுதந்திரம், நாட்டின் மதச் சார்பற்ற தன்மை, அரசியல் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் முற்றிலுமாக பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மாடுகள் மாநில அரசு சட்டம் இயற்றும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அதே போல் மிருகவதை தடுப்புச் சட்டம் மத்திய, மாநில அரசுகள் இரண்டும் சட்டம் இயற்றும் பொதுப்பட்டியலில் உள்ளது.

ஆனால் ஜல்லிக்கட்டில் தொடங்கி மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரை மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் இரண்டிலும் மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பறிக்கும் அடாவடி அரசியலை தொடர்ந்து பாஜக அரசு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்திலோ, மத்திய-மாநில உறவுகளிலோ பா.ஜ.க.விற்கு நம்பிக்கையில்லை என்பதை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது போன்ற தொடர் நடவடிக்கைகள் காலப்போக்கில் மாநில பட்டியலோ, பொதுப்பட்டியலோ, எந்தப் பட்டியலின் படியும் மாநில அரசுகளுக்கு சட்டம் இயற்றும் உரிமை இல்லை என்பதுதான் மத்தியில் உள்ள பாஜக அரசின் சிந்தனையா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் விதமாக நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்காக விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

உணவு என்பதில் நீண்ட காலமாக மக்களுக்குள்ள அடிப்படை விருப்புரிமையைத் தடுத்திடக் கூடாதென்றும், அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சமான மதச்சார்பற்ற தன்மையை அடியோடு அசைத்துப் பார்க்கும் நடவடிக்கைகளில் மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும்
மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.