m.k.stalin astatement

அதிமுக ஆட்சியின் அலங்கோலங்கள், குறைகள் போன்றவற்றை சட்டமன்றத்தில் எடுத்துச் செல்ல வாய்ப்பளிக்கப்படாத நிலையில் அவற்றை மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்வோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மக்களின் பிரச்னைகளுக்கு மதிப்பளித்து அவற்றை விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்ற இடம்தான் சட்டமன்றம். மக்களின் வாக்குரிமைதான் சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்குகிறது. எனவே, ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்களின் நலன் காப்பதே நல்லரசு . ஆனால், தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளிக்கும் போர்வையில் முதலலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவருக்குத் தனது ஆட்சி மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கவும் தெரியவில்லை, நிரூபிக்க முயலும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களையும் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லவும் இயலவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள சிறிய பிரச்னைகள் பூதாகரமாக்கப்படுகிறது என்று சொன்ன முதலமைச்சரின் கண்களுக்கு இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டு - கைது செய்யப்படுவது, மாட்டிறைச்சிக்குத் தடை கொண்டு வரப்பட்டது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்கள், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தாய்மார்கள் நடத்தும் ஆர்பாட்டங்கள், அதில் ஒரு பெண்ணை போலீஸ் ஏடிஎஸ்பி ஒருவரே கை நீட்டி கன்னத்தில் அறைந்தது, கதிராமங்களத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் கிராமத்திற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்காக அணிவகுத்து போராடுவது, அங்குப் போராடிய தாய்மார்கள் மீது காவல்துறையை ஏவி விட்டு தடியடி நடத்தச் சொன்னது, மருத்துவக் கல்வியை இழந்து தவிக்கும் மாணவ - மாணவிகளின் போராட்டங்கள் என எல்லாமே, ’சிறிய பிரச்னைகள்’ போல் தெரிந்தால், பிரதான எதிர் கட்சியான திமுக அதற்கு பொறுப்பாக முடியாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



பெண்களை முன்னிறுத்திப் போராடுவது இப்போதெல்லாம் பேஷன் ஆகி விட்டது என்றுத் பெண்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை நா கூசாமல் கொச்சைப்படுத்திய எடப்பாடியிடம் இருந்த இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.,

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ’குதிரை பேர’ ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் தான் தமிழகத்திற்கு நிம்மதி பெருமூச்சு விடும் நாள் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே திமுக பேச்சாளர்கள் ஆங்காங்கே இந்த குதிரை பேர ஆட்சியின் ஜனநாயக விரோத செயல்களையும், சட்டவிரோத காரியங்களையும், சட்டமன்ற நெறிமுறை மீறல்களையும், ஆட்சியின் அனைத்து அலங்கோலங்களையும் மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்லப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.