கனிமொழியை பாராட்டிய ஸ்டாலின்: இப்போதே தயாராக அறிவுறுத்தல்!
திமுக எம்.பி., கனிமொழி முன்னெடுக்கும் வினாடி வினா போட்டிக்கான முயற்சியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் காலமானார். பன்முகத்தன்மை கொண்ட மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுக அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. மருத்துவமனைகள், நூலகங்கள் என மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் சரியாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். கழகத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு, பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி வினாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது. “கலைஞர் 100 வினாடி வினா” என்ற பெயரில் இதற்கான ஏற்பாடுகளை திமுக எம்.பி. கனிமொழி மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த இணையவழி வினாடி வினா போட்டிக்காக பிரத்யேகமாக kalaignar100.co.in என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு ஆதரவு: சீமான் அந்தர் பல்டி!
இந்த நிலையில், திமுக எம்.பி., கனிமொழி முன்னெடுக்கும் வினாடி வினா போட்டிக்கான முயற்சியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழினத் தலைவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில், கழக துணை பொதுச் செயலாளர் தங்கை கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னெடுக்கும் கலைஞர் 100 வினாடி-வினா போட்டி நடைபெற இருக்கிறது.
திராவிட இயக்கத்தை, தமிழ்நாடு எனும் பெரும் இனத்தின், தமிழின வரலாறு, முந்தைய கள போராட்டங்கள், அரசியல் புரட்சிகள் அதற்கு வித்திட்ட நம் முன்னோட்டிகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து கூறவும் இந்த வினாடி வினா போட்டி பெரும் வாய்ப்பாக அமையும். 10 ஆயிரம் கேள்விகளோடு 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடத்தப்படும்.
இந்த வினாடி வினா போட்டியில் அனைவரும் கலந்து கொண்டு தங்களது அறிவுத்திறனை வெளிப்படுத்தலாம். kalaingar100.co.in என்ற இணையதளத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று இணையவழி போட்டிகள் நடைபெற இருக்கின்றன. செப்டம்பர் 15 ஆம் நாள் தொடங்கவுள்ள உள்ள Kalaignar 100 quiz வினாடி வினா போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.