தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்பு: டெல்லியில் இருந்து தூத்துக்குடி செல்லும் முதல்வர் ஸ்டாலின்!
தென் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 17ஆம் தேதி முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாயினர். சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாவட்ட நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதல்வர் ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே திட்டமிடப்பட்ட இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அக்கூட்டத்தை முடித்து விட்டு நாளை காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேரடியாக தூத்துக்குடி வரவுள்ளார். தொடர்ந்து, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளையும், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யவுள்ளார்.
முன்னதாக, டெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் தென் மாவட்ட கனமழை பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் நடத்தினார் என்பது கவனிக்கத்தக்கது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 84 நிவாரண முகாம்களில் 1545 குடும்பங்களை சேர்ந்த ஆண், பெண், குழந்தைகள் என 7434 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.