மிக்ஜாம் புயல்: ரூ.6000 நிவாரண நிதி - நாளை மறுநாள் தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்
தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பிரதமர் நகர்ப்புற வீடுகட்டும் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.1906 கோடி பாக்கி!
இதனிடையே, மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும், அவருக்கும் நிவாரண தொகை ரூ.6,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதிக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக ரூ.6,000 வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை வருகிற 17ஆம் தேதி (நாளை மறுநாள்) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் தொடங்கி நிவாரண நிதி வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கவுள்ளார்.
முன்னதாக, மிக்ஜாம் புயல் நிவாரண நிதி எந்த பகுதி மக்களுக்கு மற்றும் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுவதுமாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும் வழங்கலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களுக்கும் இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
மேலும், மிக்ஜாம்’ புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, 2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட வருவாய் வட்டங்கள், கிராமங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் டோக்கன் வழங்கி, ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும்.
இந்த மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு மற்றும் மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமானவரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள், தங்கள்வாழ்வாதாரம் பாதிப்பு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விவரங்களை தங்கள் வங்கிக்கணக்கு விவரத்துடன் தங்கள் பகுதிக்குரிய நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கும் உரிய நிவாரணம் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.