Asianet News TamilAsianet News Tamil

சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின்  அறிவுறுத்தியுள்ளார்

MK Stalin thrift day message Each and every family must practice thirft and save smp
Author
First Published Oct 29, 2023, 12:25 PM IST

இந்தியாவில் 1985ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்வில் தேவையற்ற ஆடம்பர  செலவுகளைத் தவிர்த்து, சிக்கனமாக வாழ்ந்து, சேமிப்பையும் மேற்கொண்டு வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின்  அறிவுறுத்தியுள்ளார். உலக சிக்கன நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: “சிக்கனத்தின் இன்றியமையாமையை அனைவருக்கும் உணர்த்திடும் நாளாக அக்டோபர் திங்கள் 30 ஆம் நாள், ஆண்டுதோறும் “உலக சிக்கன நாள்” எனக் கொண்டாடப்படுவதைக் குறித்து பெருமகிழ்ச்சி அடைவதுடன் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமித்தால், அதன்வாயிலாகக் குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதுடன், அவ்வப்போது ஏற்படும் எதிர்பாரச் செலவினங்களையும் சமாளித்திட இயலும்.

“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
 போகாறு அகலாக் கடை”

என்ற குறளில் வள்ளுவர் பெருந்தகை, பொருள் வரும் வழி சிறிதாக இருந்தாலும், பொருள் செலவாகும் வழி பெரிதாக இல்லையெனில், அதனால் தீங்கு இல்லை என்று சிக்கனமாக வாழ்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். சேமிப்பின் அவசியத்தை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே எடுத்துரைத்து, சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். “இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு” என்பதனைக் கருத்தில் கொண்டு, மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைக்காக சேமிக்க வேண்டும்.

சத்துணவு அமைப்பாளர்களின் ஓய்வூதியம் 2000 ரூபாய் போதாது...10 ஆயிரமாக உயர்த்திடுக! - அன்புமணி

சேமிப்பே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது. சேமிப்பது மட்டுமல்ல, அதைச் சரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம். எனவே, உலக சிக்கன நாள் கொண்டாடப்படும் இவ்வேளையில், மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து அதன்மூலம் தங்கள் வாழ்வில் வளம் சேர்ப்பதுடன், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணை புரிந்திட வேண்டுகிறேன். சேமிப்போம்! சிறப்பாக வாழ்வோம்!” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios