எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மேகதாது பிரச்சினை: முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
கர்நாடகாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மேகதாது பிரச்சினை குறித்து முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் நீர் பாசன திட்டங்கள் முழுமை அடைய வேண்டும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் உள்ள நீர் மேலாண்மைக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிக அளவிலான நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கடந்த சில தினங்களாக உலக அளவில் சராசரி வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளதாகவும் இதனால் மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள இருக்கிறோம் எனவும் எச்சரிக்கை விடுத்த அன்புமணி ராமதாஸ், இதற்கு முக்கிய நீர் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் நீர் மேலாண்மை திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்தவித அரசியலும் இருக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.
மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது எனவும், அங்கு அணை கட்ட முடியாது என தெரிந்தும் மக்களை தூண்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் தன்மையை அவர்கள் கண்டிப்பதாகவும் அன்புமணி தெரிவித்தார்.
தமிழகத்தில் 60 ஆண்டு கால திராவிட கட்சிகள் ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டிய அன்புமணி ராமதாஸ், மற்ற மாநிலங்கள் இலட்சக்கணக்கான கோடிகளை நீர் மேலாண்மைக்கு ஒதுக்கியுள்ளன. ஆனால், தமிழகத்தில் வெறும் 8000 கோடி மட்டுமே நீர் பாசன திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
அனைத்து ஆறுகளிலும் தடுப்பணை கட்ட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என சுட்டிக்காட்டிய அவர், “காவிரி ஆற்றில் மட்டும் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டினால் 170 டிஎம்சி வரை தண்ணீரை சேமிக்கலாம். கொள்ளிடம் ஆற்றில் 10 தடுப்பணை கட்ட வேண்டும் என பாமக வலியுறுத்தினால் அரசு 10 குவாரிகள் திறக்க அனுமதி கொடுக்கிறது. தடுப்பணை கட்டினால் மணல் எடுக்க முடியாது என்பதால் அதனை கட்டவில்லை.” என்றும் விமர்சித்தார்.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனப் பகுதிகளில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டதாகவும், அண்மையில் கூட யானை மிதித்து ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், “விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியது ஏற்புடையது அல்ல. ஒவ்வொரு வீடுகளுக்கும் அவரை நேரில் அழைத்துச் செல்கிறேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அவரை நேரடியாக கேட்கட்டும். தக்காளி விலை கடந்த மாதம் மிகக் குறைவாக இருந்த நேரத்தில் அரசு குளிர் பதன கிடங்குகள் அமைத்து இருந்தால் தற்போது அதனை சேமித்து வைத்து குறைந்த விலைக்கு தக்காளிகளை விற்பனை செய்திருக்கலாம். எட்டு கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் தமிழக அரசு வெறும் 150 தக்காளி விற்பனை மையங்களை மட்டும் திறந்தால் அது போதுமானதா?” என கேள்வி எழுப்பினார்.
மதுவை திணிக்கும் நோக்கில் அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், ஏற்கனவே இருந்த செந்தில் பாலாஜிக்கு மாற்றாக தற்போது அமைச்சர் முத்துசாமி அந்தத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கு சமூக அக்கறை உண்டு என்பதால் அதில் சீர்திருத்தம் செய்வார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், எப்போது வேண்டுமானாலும் மது கிடைக்கிறது. தமிழகத்தின் வடக்கு மண்டலத்தில் 65 கடைகளை மட்டுமே டாஸ்மாக் நிர்வாகம் மூடியுள்ளது. அனுமதி உடன் 4700 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 25 ஆயிரம் கடைகள் செயல்படுவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
சிறைச்சாலைகளில் போதை பொருட்கள் புழங்குவதாகவும் அனைத்து இடங்களிலும் தங்கு தடை இன்றி கஞ்சா புழக்கம் இருப்பதாகவும் முதல்வரிடம் இது குறித்து நேரடியாக பலமுறை சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அன்புமணி ராமதாஸ் சுட்டி காட்டினார். மேற்கு மண்டல காவல்துறை டிஐஜி தற்கொலை சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும், இந்த சம்பவம் பொதுமக்களின் விவாதமாக இல்லாமல் தற்கொலைக்கான காரணம் குறித்து முழுமையாக அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் சார்பில் நடக்க இருப்பது அரசியல் கூட்டம் என்பதால் அதில் முதல்வர் கலந்து கொள்வது வேறு. ஆனால் அங்கு மேகதாது அணை பிரச்சனை பற்றி அவர் பேச வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதித்தால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை முதல்வர் கருத்தில் கொள்ள வேண்டும்.” என்றார்.
திமுக நிர்வாகி பிறந்தநாள்: பொதுமக்களுக்கு இலவச தக்காளி!
அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை என்று தேர்தல் அறிக்கையில் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுப்போம் என கூறுவதை ஏற்க முடியாது எனவும், அதிமுக மதுரை மாநாட்டிற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் எனக் கூறுவது அவர்களது தொண்டர்களை உற்சாகப்படுத்த மட்டுமே என்றும் கூறினார்.
தமிழகத்தில் முதல்வரும் ஆளுநரும் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு நல்லது நடக்கும். ஆளுநர்கள் நீதிபதிகளை போல் என்பதால் அவர்கள் நடுநிலையாக செயல்பட வேண்டும்; அரசியல் பேசக்கூடாது என்றும் அன்புமணி ராமதாஸ் சுட்டி காட்டினார்.
தொடர்ந்து, மாமன்னன் திரைப்படத்தை பார்த்தீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இதுவரை பார்க்கவில்லை அதற்கான நேரம் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். சாதிய கருத்துக்கள் அந்த படத்தில் இருப்பதால் படத்தை பார்க்கவில்லையா என செய்தியாளர் எதிர் கேள்வி எழுப்பவே, பாமக சாதியக் கட்சி இல்லை என்றும் தலித் ஒருவருக்கு பொதுசெயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தது பாமக மட்டுமே; திமுக வழங்கியதா எனவும் கேள்வி எழுப்பினார். பத்திரிகையாளர்கள் வன்மத்துடன் கேள்வி எழுப்பக் கூடாது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாட்டாளி மக்கள் கட்சி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே பாராளுமன்ற தேர்தல் பணியை துவங்கிவிட்டதாகவும் கூட்டனி குறித்த அறிவிப்பை தேர்தலுக்கு முன்பாக மட்டுமே அறிவிப்போம் என்றும் தெரிவித்தார்.