திமுக நிர்வாகி பிறந்தநாள்: பொதுமக்களுக்கு இலவச தக்காளி!
திமுக நிர்வாகி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக தக்காளி விநியோகம் செய்யப்பட்டுள்ளது

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கனமழை, வரத்து குறைவு காரணமாக தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தக்காளி கிலோ ஒன்று ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், திமுக நிர்வாகி பிறந்தநாள் விழாவையொட்டி, கடலூர் முதுநகரில் பொதுமக்களுக்கு இலவசமாக 1,200 கிலோ தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளரும், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தின் மகனுமான கதிரவன் பிறந்த நாளை முன்னிட்டு 42ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி செந்தில் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவசமாக 1,200 கிலோ தக்காளி விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வை கடலூர் முதுநகர் பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தக்காளியை இலவசமாக பெற்று சென்றனர்.