- Home
- Tamil Nadu News
- தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!
ஒவ்வொரு முறையும் கட்டணங்களை உயர்த்தக்கூடாது என ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் இவற்றையெல்லாம் காதில் வாங்காத ஆம்னி பேருந்துகள் ராக்கெட் உச்சத்தில் கட்டணங்களை உயர்த்தி வருகின்றன.

அரையாண்டு தொடர் விடுமுறை
தமிழகத்தில் வரும் 24ம் தேதி (புதன்கிழமை) முதல் 4ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி சென்னையில் இருந்தும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுக்க உள்ளனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து மதுரை, கோவை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்துகளில் முன்பதிவு முடிந்து விட்டன.
சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள்
சென்னையில் இருந்து கோவை மார்க்கமாக செல்லும் ரயில்களிலும், தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களிலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி காத்திருப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்துகளை அதிகம் நம்பியுள்ளனர்.
சென்னை டூ நெல்லை ரூ.6,000 கட்டணம்
இதை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ள ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.2,000 முதல் ரூ.4,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.5,000 வரையிலும், சென்னை டூ நெல்லை, நாகர்கோவிலுக்கு ரூ.6,000 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிச்சியில் உறைந்துபோயுள்ளனர்.
விமான டிக்கெட் விலையில் பஸ் கட்டணம்
மேற்கொண்ட இடங்களுக்கு வழக்கத்தை விட மூன்று, நான்கு மடங்கு விமானங்களுக்கு ஈடாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் தேவை அதிகரிப்பதைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதை வாடிக்கையாக வைத்துள்ளன.
ஒவ்வொரு முறையும் கட்டணங்களை உயர்த்தக்கூடாது என ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் இவற்றையெல்லாம் காதில் வாங்காத ஆம்னி பேருந்துகள் ராக்கெட் உச்சத்தில் கட்டணங்களை உயர்த்தி வருகின்றன.
தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை
ஆம்னி பேருந்துகளின் ஆன்லைன் முன்பதிவு தளங்களில் கட்டணங்கள் வெளிப்படையாகக் காட்டப்படுவதில்லை. வெளியே பார்வைக்கு குறைவாக டிக்கெட் உள்ளதுபோல் செட் செய்து உள்ளே கிளிக் செய்தால் பன்மடங்கு டிக்கெட் உயர்த்தபடுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். அம்னி பேருந்துகளுக்கு அரசு நிலையான ஒரு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

