பொன்முடிக்கு ஃபோன் போட்ட ஸ்டாலின்: என்ன அட்வைஸ் கொடுத்தார் தெரியுமா?
அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்

தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவர்களுக்கு தொடர்புடைய 9 இடங்களில் நடைபெற்ற சோதனையின் முடிவில், அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், இன்று காலை 3 மணியளவில் அவரை விடுவித்தனர். மேலும், அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோர் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
செம்மண் குவாரி தொடர்பாக, அமைச்சர் பொன்முடி மீது 2012ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. இந்த சோதனையின்போது, ரூ.10 லட்சம் மதிப்பிலான அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சத்தை அமலாக்கத் துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் விசாரணையை எதிர்கொள்ளுமாறு பொன்முடிக்கு அறிவுரை கூறினார்.
உம்மன் சாண்டி உடல் 20ஆம் தேதி நல்லடக்கம்: கேரள அரசு பொது விடுமுறை அறிவிப்பு!
ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் கழகம் என்றும் துணை நிற்கும் எனவும் அப்போது அமைச்சர் பொன்முடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு சென்றுள்ளார். நேற்றும், இன்றும் என இரு அமர்வுகளாக காங்கிரஸ் தலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. பொன்முடிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.