Asianet News TamilAsianet News Tamil

கலைஞர் மருத்துவமனை இங்கே... எய்ம்ஸ் எங்கே? - ஸ்டாலின் சரவெடி!

பதினைந்தே மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்

MK Stalin lauds kalaignar centenary super speciality hospital wuestion aiims
Author
First Published Jun 15, 2023, 8:27 PM IST

பதினைந்தே மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 4.89 ஏக்கர் நிலத்தில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை செவிலியர்களுடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மருத்துவமனையின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன்பிறகு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “‘ஒரு மனிதனின் வாழ்க்கை என்பதை அவரது மரணத்துக்குப் பிறகு இருந்து கணக்கிட வேண்டும்' என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். அந்த வகையில் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல நிறைவுற்றதற்குப் பின்னாலும் தமிழ்ச் சமுதாயத்துக்காக பயன்பட்டுக் கொண்டு இருக்கக் கூடிய மாபெரும் தலைவர்தான் தமிழினத் தலைவர் கலைஞர்.

இந்த கிண்டி பகுதி சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்டது. சைதாப்பேட்டை என்பது, கலைஞர் நின்று வென்ற தொகுதி ஆகும். சைதாப்பேட்டை வேட்பாளர் - திருவாளர் 11 லட்சம் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு தேர்தலுக்கு அறிவிப்பு செய்தார்கள். எனவே, இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக - இப்போதும் இருந்து ஒரு மாபெரும் மருத்துவமனையை வாங்கிக் கொடுத்திருக்கிறார் கலைஞர்.” என்றார்.

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை - செவிலியர்களுடன் திறந்த முதல்வர் ஸ்டாலின்!

இந்த வளாகத்துக்கு கிங் இன்ஸ்டிடியூட் என்று பெயர். இதுவும் பொருத்தமானதுதான் என்ற முதல்வர் ஸ்டாலின், “கலைஞர் என்றாலே கிங் தான். அவர் வாழ்ந்த காலம் முழுவதும் கிங் மேக்கராக இருந்தவர். அந்த வகையில் கிங் ஆராய்ச்சி வளாகத்தில் திறக்கப்படும் மருத்துவமனைக்கு கலைஞர் பெயர் வைக்கப்பட்டது மிகமிக பொருத்தமானது.” என்றார்.

பதினைந்து மாதத்தில் இந்த மருத்துவமனையைக் கட்டி இருக்கிறோம் என பலமுறை கூறிய முதல்வர் ஸ்டாலின், இது மிக முக்கியமான சாதனை என குறிப்பிட்டார். அத்துடன், “2015 ஆம் ஆண்டு அறிவித்துவிட்டு - 2023 ஆம் ஆண்டு வரை இரண்டாவது செங்கலைக் கூட எடுத்து வைக்காத அலட்சியத்தோடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும் நிலையில் அடிக்கல் நாட்டிய 15 மாதத்தில் இந்த மாபெரும் மருத்துவமனையை நாம் கட்டி எழுப்பி இருக்கிறோம்.” என்று மத்திய அரசை சாடினார்.

முன்னதாக, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பையொட்டி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் முடிவுறாமல் இருப்பதை சுட்டிக்காட்டும்  வகையில், ட்விட்டரில் #கலைஞர்_இங்கே_எய்ம்ஸ்_எங்கே என்ற கேஹ்டேக் ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios