எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 90% பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக தகவல்..
சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியில் மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.ஏற்கன்வே கல்லூரியில் 80 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு கடந்த சில நாட்களாக நடந்த பரிசோதனையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எம்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் மொத்தம் 1,417 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இதுவரை 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்று கொரோனா தொற்று உறுதியானவர்களின் 50 பேருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பிற்கான அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவர்களில் சுமார் 90 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஏற்கெனவே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு விடுதி மாணவர்களில் 4 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதே சென்னை குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் சுமார் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 250-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 30 ஊழியர்களுக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்பேரில் தற்போது குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து17 ஆயிரத்து100 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.மேலும் நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின் படி நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 1,17,100 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,52,26,386 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரை நேற்று ஒரே நாளில் 6,983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் ஒரு நாள் பாதிப்பு 4,862 ஆக இருந்த நிலையில் கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் 2,121 அதிகரித்து 6,983 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 3,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முந்தினம் ஒரு நாள் பாதிப்பு 2,481 ஆக இருந்த நிலையில், மேலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,825 ஆக உள்ளது.