கன்னியாகுமரி

கன்னியாகுமரியில், மாயமான அதிமுக நிர்வாகி மர்மமான முறையில் தூக்கில் சடலமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை அடுத்த திங்கள்சந்தை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (37). தச்சு தொழிலாளியான இவர், பேரூர் கழக அதிமுக இளைஞர் பாசறை செயலாளராகவும் இருந்தார். 

கடந்த 22-ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிவகுமாரின் தாயார் இரணியல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில், நேற்று காலை நெய்யூர் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த இரணியல் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில் இறந்தவர் காணாமல்போன சிவகுமார் என்பது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பதை குறித்து காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மாயமான அதிமுக நிர்வாகி மர்மமான முறையில் தூக்கில் சடலமாக கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.