தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை பற்றி நான் எப்போதுமே தவறாக விமரிசிக்கவில்லை என்று மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த்தை அறிவித்தது தவறு என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வைகோ பேட்டி அளித்ததாக, சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இதற்கு கண்டனம் தெரிவித்து பதிலளித்த பிரேமலதா, தேமுதிகவுக்கு ஆதரவு இல்லை என மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியிருக்கிறார். மேலும், முதல்வராக விஜயகாந்தை முன்னிறுத்தியது தவறு என்று அவர் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அவர் உணர்ச்சி வசப்படக்கூடிய குணம் கொண்டவர். தினமும் ஒரு கருத்து சொல்வார். அவர் சொல்கிற கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேமுதிகவுடன் கூட்டணி வேண்டும் என்று தேடி வந்தவரும் அவரே. இப்போது விமர்சனங்களை வைப்பதும் அவரே. இதற்கு அவரே பதில் சொல்வார் என்று கடுமையாகப் பேசினார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா அவர்களுக்கு ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்த நேரத்திலும் விஜயகாந்தை பற்றி நான் தவறாக விமர்சனம் செய்யவில்லை.

தனியார் தொலைக்காட்சியின் பேட்டியின்போது, மக்கள் நலக் கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்ததும், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது தவறுதானே என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு, "தவறுதான்" ஆனால் அது எந்த சூழ்நிலையில் நடந்தது என்று கோடிட்டுக் காட்டவே, திமுக சார்பில் தேமுதிகவுக்கு 58 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும், பல கோடி ரூபாய் கொடுக்க பேரம் பேசப்படுவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகின.

தேமுதிகவை தன் பக்கம் இழுக்க திமுக முயற்சித்தபோது அதை எதிர்த்துவிட்டு, நிராகரித்துவிட்டு மக்கள் நலக் கூட்டணியில் இணைவது என்ற துணிச்சலாக அவர் எடுத்த முடிவு பாராட்டத்தக்கது என்று தான் எனது முழுமையான பேட்டியில் கூறியிருந்தேன்.

ஆனால், அந்த பேட்டிக்கு தலைப்பு தவறாக - ஒரு ஊடகத்தில் என்ன தலைப்பு வைக்க வேண்டும் என்பது அவர்களது விருப்பம்- கொடுக்கப்பட்டுவிட்டது. தலைப்பை மட்டும் புரிந்து கொண்டு சகோதரி பிரேமலதா அவ்வாறு கூறியிருக்கிறார். நான் எந்த தவறான கருத்தையும் கூறவில்லை என்று வைகோ விளக்கம் அளித்துள்ளார்.