புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேரை திருக்கனூர் போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர். 

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. 

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், விழுப்புரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார். அப்போது பேருந்தில் விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரை சேர்ந்த விக்கி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை வழுதாவூரில் உள்ள ஒரு தோப்புக்கு அழைத்து சென்று விக்கி தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அந்த சிறுமி, பெற்றோருடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர், குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவை அணுகியுள்ளனர். அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 8 பேரை தேடிவருகின்றனர்.